Friday, March 21, 2008

கனவு

நேரம் நள்ளிரவை தாண்டி விட்டிருந்தது, ஆயினும் பேருந்து நிலையத்தில் மட்டும் கூட்டம் குறைந்தபாடில்லை. தன் ஊருக்கு செல்லும் கடைசி பேருந்தில் எப்படியோ கஷ்டப்பட்டு இடம் பிடித்து உக்கார்ந்து கொண்டான் முரளி.முரளி சென்னையில் தங்கிருந்து கொண்டு ஐ ஏ ஸ் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தான்.இப்பொழுது தான் தேர்வுகளை முடித்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருக்கிறான். அவனை மாவட்ட ஆட்சியாளராக்கிப் பார்க்க வேண்டும் என்பது அவன் அம்மாவின் நெடுநாள் கனவு.வண்டி பேருந்து நிலையத்தை விட்டு கிளம்ப ஆரம்பித்தவுடன் அவன் மனமும் பழைய எண்ணங்களை மெல்ல அசை போட ஆரம்பித்திருந்தது.அவனின் சிறு வயதினிலேயே அவன் தந்தை இறந்து விட்டார்.அவனுடைய அம்மா தான் அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.


ராதா, சுந்தர்,முரளி மூவரும் சிறு வயது முதலே இணை பிரியாத நண்பர்கள்.எப்பொழுதுமே ஒன்றாக தான் சுற்றி திரிவர்.மூவரும் ஒரே பள்ளியில் தான் படித்து கொண்டிருந்தனர்.பின்பு கல்லூரி படிப்பிற்காக இவன் மட்டும் வெளியூர் சென்று விட அவர்கள் இருவரும் உள்ளூரில் உள்ள கல்லூரியில் படித்தனர். ஆனாலும் விடுமுறை வந்தால் முரளி ஊருக்கு வந்து விடுவான்,பின்பு மூவரும் ஒன்றாக பேசி மகிழ்வர்.ராதாவுக்கு எப்போதுமே இவன் மேல் அன்பு அதிகம்.சுந்தர் முரளியை எதாவது கிண்டல் செய்தால் கூட ,ராதா அவனுக்குக்காக தான் பரிந்து பேசுவாள்.


ஒரு முறை அவனுடைய கல்லூரி தேர்விற்கு அவனுடைய அம்மாவால் குறித்த நேரத்தில் பணம் அனுப்ப முடியாமல் போனது.அப்போது அவள் தான் தன் தந்தையிடம் பேசி அவனுடைய தேர்விற்கு பணம் ஏற்பாடு செய்தாள்.அந்த நிகழ்வுக்கு பின் அவனுக்கு அவளிடம் தோழமையை தாண்டி ஒரு ஈர்ப்பு பிறந்தது. எனினும் தன்னுடைய அம்மாவின் கனவை நிறைவேற்றிய பின்னரே தன் காதலை ராதாவிடம் தெரிவிப்பதென முடிவு செய்தான்.


கல்லூரி படிப்பு முடிந்தவுடன், ராதாவும் , சுந்தரும் உள்ளூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றனர்.முரளி மட்டும் அவன் அம்மாவின் ஆசைப்படி ஐ ஏ ஸ் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தான்.முதல் தடவை அவனால் ஐ ஏ ஸ் தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போனது. அதனால் அவன் மிகவும் மனமொடிந்திருந்தான்.சுந்தர் தான் அவனை ஆறுதல் படுத்தி சென்னையில் உள்ள பயிற்சி நிலையம் ஒன்றில் சேர்த்து விட்டான். மேலும் அவனுடைய அன்றாட செலவுக்கு பணம் அனுப்பி வைத்து கொண்டிருந்தான்.


இன்று தான் தேர்வை நல்ல படியாக எழுதி முடித்து விட்டு வீடு திரும்புகிறான். தேர்வு முடிவுகள் வெளியான உடன் ராதாவிடம் தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று அவன் எண்ணி கொண்டிருக்கையில், பக்கத்தில் உக்கார்ந்திருந்த பெரியவர் அவனை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்புகிறார்.இன்னும் ஐந்து நிமிடங்களில் அவன் ஊர் நிறுத்தம் வந்து விடுமென கூறுகிறார்.அவன் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் சுந்தரின் வருகைக்காக காத்திருக்கிறான். சுந்தர் வண்டியில் வந்து அவனை அழைத்து செல்வதாக கூறியிருந்தான்.பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கையில் அவன் ஊர் பஞ்சயத்து தலைவரை சந்திக்கிறான்.அவர் கூறிய செய்தியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.அவனுக்கு சிறிது தலை சுற்றுவது போல் இருந்தது.கண்களில் கண்ணீர் குளமென கட்டிக்கொண்டது.


சுந்தரும் ராதாவும் தன்னிடமிருந்து இப்படி ஒரு செய்தியை மறைப்பார்கள் என கனவிலும் அவன் கருதவில்லை. சுந்தருக்காக காத்திருக்காமல் தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான். அவனை தேடி சென்ற சுந்தர் அவன் பேருந்து நிலையத்தில் இல்லாததால் வீட்டுக்கு சென்றிருப்பான் என எண்ணி வண்டியில் வீட்டுக்கு செல்ல துவங்கினான். யாரவது முரளியிடம் தகவலை சொல்லியிருப்பார்களோ என எண்ணி சுந்தரின் மனம் பதபதைத்தது.சுந்தர் வீட்டை நெருங்கியவுடனே முரளி வீட்டுக்கு வந்து விட்டான் என அவனுக்கு தெரிந்து விட்டது.



முரளியின் வீட்டுக்குள் நுழைந்த சுந்தர் ராதா மூலையில் அழுது கொண்டிருப்பதை கவனித்தான்.கதவின் அருகில் நின்று கொண்டிருந்த முரளி சுந்தரின் அருகில் சென்று தன் தாய் நேற்று முன் தினம் இறந்த செய்தியை ஏன் தெரிவிக்கவில்லை என வினவினான்.முரளியின் தாய் சாகும் தருவாயில், தான் இறந்து போனால் அந்த தகவலை தன் மகனிடம் சொல்ல வேண்டாம் என கூறியதாக சுந்தர் கூறினான். தான் இறந்து போன தகவலறிந்தால் தன் மகன் தேர்வை எழுதாமல் வீட்டுக்கு வந்து விடுவான்,அதனால் அவனுடைய முயற்சிகள் வீணாய் போய் விடும் என சாகும் தருவாயிலும் தன் முன்னேற்றத்தை பற்றி கவலைப்பட்ட தாயை எண்ணி கண்ணீர் வடித்தான் முரளி.சுந்தர் அவனை ஆதரவாக தன் தோள்களில் தாங்கி கொண்டான்.

Tuesday, March 4, 2008

தூக்கமில்லா இரவுகள்

காதலின் பரிசு முத்தமெனில்
காதல் வந்தவுடன் என் இமைகள்
என் கண்களை முத்தமிட மறுப்பதேன்?